சென்னை: திரையரங்கில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகா (21). சென்னையில் தங்கி, உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அவரது நண்பர்கள், சந்தோஷ், சிவா, விக்கி ஆகியோருடன் கடந்த 28-ம் தேதி இரவு, வடபழனியிலுள்ள பிரபலமான திரையரங்கில் இரவு காட்சி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஜெகாவின் நண்பர் சந்தோஷின் கால் முட்டி முன் சீட்டில் பட்டுள்ளது. இதனால், அந்த சீட்டிலிருந்து படம் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் கோபம் அடைந்து திட்டியிருக்கிறார். இதையடுத்து, நண்பருக்காக ஜெகா மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்துள்ளனர். பின்னர், படம் முடிந்த உடன் ஜெகா நண்பர்களுடன் திரையரங்கை விட்டு வெளியே வந்துள்ளார்.
இதனிடையே, எதிர் தரப்பினர் போன் மூலம் அவர்களது நண்பர்களை திரையரங்க வளாகத்துக்கு வரவழைத்துள்ளனர். ஜெகா மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றபோது, அங்கே தயாராக நின்று கொண்டிருந்த கும்பல் ஜெகாவையும் அவரது நண்பர்கள் மூவரையும் கைகளாலும், பீர் பாட்டிலாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஜெகா தரப்பினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இருப்பினும், அந்த கும்பலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
இதில், காயம் அடைந்த ஜெகா உள்பட 4 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து வடபழனி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், திரையரங்கில் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டது அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் (23), கோடம்பாக்கம் பூபதி நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் (27), நுங்கம்பாக்கம் கிராமம் தெருவைச் சேர்ந்த ராகேஷ் குமார் (27) என்பது தெரிந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.