திருவள்ளூர்: திருவள்ளூரில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வுக்காக, திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி மாணவியான ஜெயா நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தீவிரமாக தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மாணவி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தேர்வுக்காக படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இச்சூழலில், அம்மாணவி திங்கள்கிழமை அதிகாலை தன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு, மாணவிக்கு 80 சதவீதம் தீக்காயங்கள் இருந்ததால், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவள்ளூர் டவுன் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆகவே, மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.