கோவையில் மனைவியை சுட்டுக் கொன்று பாலக்காட்டில் கணவர் தற்கொலை


கோவையில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவர், கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு தப்பிச்சென்று தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (52). இவரது மனைவி சங்கீதா (45). சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வேலை பார்த்துவந்த கிருஷ்ணகுமார், தற்போது மனைவி, மகள்களுடன் பட்டணம்புதூரில் தங்கியிருந்தார். சங்கீதா, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் பள்ளியில் நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், மகள்கள் இருவரும் நேற்று காலை பள்ளிக்கு சென்ற நிலையில், தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி சங்கீதாவை சுட்டுள்ளார். இதில் சங்கீதா குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் கிருஷ்ணகுமார் அங்கிருந்து காரில் புறப்பட்டு தனது சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வண்டாழிமங்களம் அணை பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது வீட்டின் முன்பாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த சூலூர் போலீஸார் சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல, பாலக்காடு மாவட்ட போலீஸார், கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சூலூர் போலீஸார் கூறும்போது, “சங்கீதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கிருஷ்ணகுமார் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றனர்

x