தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (32). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூலிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பிப்.28ம் தேதி வசூலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் மார்ச் 1ம் தேதி புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சிவா பிப்.28-ம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோடாலி கிராமத்துக்கு பணம் வசூல் செய்ய சென்றதும், ஆனால், அங்கிருந்து வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையே, கோடாலி கிராமத் துக்கு அருகே உள்ள ஆயுதகளம் கிராமத்தில் செங்கால் ஓடையில் உடல் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக தா.பழூர் போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்று போலீஸார், எரிந்த நிலையில் இருந்த உடலிலிருந்த மோதிரத்தை கைப் பற்றி விசாரணை செய்தனர். அதில், எரிக்கப் பட்டு இறந்து கிடப்பது சிவா என்பதை அவர்களின் உறவினர்கள் உறுதிப்படுத்தினர். சிவாவின் உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.
பணம் வசூல் செய்ய கோடாலி கிராமத்துக்கு வந்த சிவா எரிந்த நிலையில் கிடந்தது எப்படி ? அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா ? என தா.பழூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.