குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: எடப்பாடி அருகே பொதுமக்கள், விவசாயிகள் கைது


சேலம்: எடப்பாடி அருகே கிராமப் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மக்களை போலீஸார் கைது செய்தனர்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குறுக்குப் பாறையனூர் கிராமத்தில் கொட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் வாகனங்களை சிறைபிடித்தும், குப்பையை கொட்டவிடாமல் தடுத்தும் வந்தனர். இந்நிலையில் 22-வது நாளான நேற்றும், குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொது மக்களை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை மாற்று இடத்தில் கொட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதே பகுதியில் குப்பையை கொட்டுவது மட்டுமில்லாமல் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது. அப்பகுதியில் பாறைகளை தகர்க்கும் வகையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய பாறைக் கற்கள் விழுந்ததில் திடக்கழிவு மேலாண் திட்டத்துக்கான சுற்றுச்சுவர் சுவர் ஆங்காங்கே சேதமடைந்து இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் இல்லையெனில் குடியிருப்பு பகுதியில் கற்கள் விழுந்து மக்கள் பாதிக்கப் பட்டிருப்பர், என்றனர்.

x