மதுரையில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த சமத்துவ ‘புல்லட்’ பேரணியில் சென்ற 170 பேர் மீது தல்லாகுளம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி என்ற பட்டியலின மாணவர் ‘புல்லட்’ ஓட்டியதால் அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களால் ஆயுதங்களால் தாக்குதலுக்கு உள்ளானார். இச்சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமத்துவ ‘புல்லட்’ பேரணி மதுரையில் நேற்று முன்தினம் நடந்தது.
ராஜா முத்தையா மன்றத்திலிருந்து காந்தி நினைவு அருங்காட்சியகம் வரை பேரணியாகச் சென்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பெண்கள் உள்ளிட்ட 170 பேர் மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.