சென்னை: வியாசர்பாடி - பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே மெதுவாக சென்ற ரயில்களில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தொடர்பாக இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பரங்கிமலையைச் சேர்ந்தவர் மகிமைதாஸ் (52). இவர் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சதாப்தி விரைவு ரயிலில் கடந்த 21-ம் தேதி வந்து கொண்டு இருந்தார். இந்த ரயில் வியாசர்பாடி - பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே மெதுவாக வந்தபோது, மகிமைதாஸ் படிக்கட்டு பக்கம் நின்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு நபர்கள், மகிமைதாஸின் செல்போனை குச்சி வைத்து கீழே தட்டிவிட்டு எடுத்து, தப்பி ஓடினர். இது குறித்து, பெரம்பூர் ரயில்வே போலீஸில் மகிமைதாஸ் புகார் கொடுத்தார். இதன்பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இதேபோல, இந்த குறிப்பிட்ட பகுதியில், பயணிகளிடம் செல்போன் பறிப்பு சம்பவம் அடிக்கடி நிகழ்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, பெரம்பூர் ரயில்வே காவல் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையில் ரயில்வே போலீஸாரும், ஆர்பிஎஃப் போலீஸாரும் இணைந்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே இருவர் வெள்ளிக்கிழமை மாலை நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசினர்.
அவர்களை பெரம்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, விசாரித்தபோது, அவர்கள், சென்னை கன்னிகாபுரத்தைச் சேர்ந்த பிரவீன் (20), சுகுனேஷ் (22) ஆகியோர் என்பதும், வியாசர்பாடி - பேசின்பிரிட்ஜ் நிலையங்களுக்கு இடையே ரயில் பயணிகளிடம் செல்போனை தட்டி பறித்தும், திருடிய செல்போன்களை விற்று, மது அருந்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.