தூத்துக்குடி: தேவகோட்டையில் பூட்டிய வீடுகளில் திருடிவிட்டு திருச்செந்தூருக்கு சாமி கும்பிடச் சென்ற டவுசர் திருடனை, போலீஸார் கைது செய்து 32 பவுன் நகைகளை மீட்டனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் ஊருணி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் நாகலெட்சுமி. இவர் பிப்ரவரி 23-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சந்தைக்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.2.5 லட்சம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.ச்அதே நாளில் ஞானநந்தி நகரில் ராஜாமணி குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர்.
இவரது வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள், ரூ.15,000 திருடப்பட்டன. இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த 2 திருட்டுச் சம்பவங்களும் பட்டப்பகலில் நடந்ததால், அப்பகுதி மக்களிடம் அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில், டிஎஸ்பி கவுதம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. அவர்கள் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது காரைக்குடி சத்யா நகரைச் சேர்ந்த சரவணன் (40) என்பது தெரியவந்தது. மேலும், அவர் டவுசர் அணிந்து வந்து 2 வீடுகளிலும் திருடியது தெரியவந்தது. இவர் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தேவகோட்டையில் திருட்டை வெற்றிகரமாக முடித்ததற்காக, திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட டவுசர் திருடன் சரவணன் சென்றிருந்தார். தனிப்படையினர் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 32 பவுன் நகைகள், ரூ.2.15 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டன.