ஜோலார்பேட்டையில் முன்னாள் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது


ஜோலார்பேட்டை: முன்னாள் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை அன்னை நகரைச் சேர்ந்தவர் சேகர் (59). ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருக்கும். அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ராஜ் குமார் (33) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு நவ.25-ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜ்குமார், சேகரை சரமாரியாக தாக்கி உள்ளார். இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, ராஜ்குமார் பணிக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுமுறையில் கடந்த வாரம் வீடு திரும்பினார். அப்போது ராஜ்குமார், சேகரிடம் சென்று என் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத் தியுள்ளார். ஆனால், அவர் தான் கொடுத்த புகாரை திரும்ப பெற மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், சேகரை மீண்டும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், சேகரின் உறவினர் மோகன் குமார் (50), அவரது சகோதரர் காளிதாஸ் ஆகியோரையும் தாக்கியுள்ளார்.

இது குறித்து சேகர் கொடுத்த புகாரில், ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரர் ராஜ் குமாரை நேற்று கைது செய்த னர். இதேபோல், ராஜ்குமார் கொடுத்த புகாரில் சேகர், காளிதாஸ் மற்றும் மோகன்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மோகன் குமாரை கைது செய்தனர். மேலும், சேகர் மற்றும் காளிதாஸிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x