சென்னை | போலி மாநகராட்சி அதிகாரிகள் 3 பேர் கைது: மீன் கடைகளுக்கு உரிமம் வழங்கியபோது சிக்கினர்


சென்னையில் போலி மாநகராட்சி அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: சென்னையில் போலி மாநகராட்சி அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடைகளுக்கு உரிமம் வழங்கும், சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டல (கோட்டம் 62) உரிம ஆய்வாளர் லோகநாதன் கடந்த 26-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் சாலையில் உள்ள மீன்கடை ஒன்றில் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின் உரிமம் ஆய்வாளர், உரிமம் உதவியாளர் என போலியான அடையாள அட்டைகள் வைத்துக் கொண்டு, ஒருவருக்கு மீன் கடைக்கான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறினர். மேலும், மற்றொருவருக்கு போலியான உரிமம் வழங்கி ரூ.15,800 பெற்றனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிம ஆய்வாளர் லோகநாதன் இதுகுறித்து சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீஸார் சம்பவ இடம் விரைந்து மாநகராட்சியின் உரிம ஆய்வாளர் போல் நடித்து, போலி உரிமம் வழங்கிய ராயபுரம் ஆஞ்சநேயா நகரைச் சேர்ந்த பால்ராஜ் என்ற ரோகித் (30), புதுப்பேட்டை கொய்யா தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் (37), கொருக்குப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்த பாபு (30) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுகாதாரத் துறையின் போலி அடையாள அட்டைகள், ஒரு போலி உரிமம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x