சென்னை மாநகராட்சி பொறியாளர் பணிக்கு போலி நியமன ஆணை: சிவகங்கையில் ரூ.25 லட்சம் மோசடி


சிவகங்கை: சென்னை மாநகராட்சி பொறியாளர் பணிக்கு போலி பணி ஆணை கொடுத்து ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் சுந்தரி (52). இவருக்கு சிவகங்கை அருகே சக்கந்தியைச் சேர்ந்த மகா பிரபு என்பவர் அறிமுகமானார். அப்போது தனது மகன் சென்னை மாநகராட்சியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கலாம் என்றும் மகா பிரபு கூறியுள்ளார்.

இதை நம்பிய சுந்தரி தனது மகன் ரஞ்சித் குமாருக்கு பொறியாளர் பணி வாங்கி தருமாறு கூறி, 2023 ஏப்ரல் மாதத்தில் ரூ.25 லட்சத்தை மகா பிரபுவிடம் கொடுத்தார். பணத்தை பெற்று கொண்ட மகா பிரபு சென்னை மாநகராட்சி பொறியாளர் பணிக்கான ஆணையை கொடுத்துள்ளார். அந்த ஆணையுடன் சுந்தரியின் மகன் வேலைக்குச் சென்றபோது, அது போலி என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலி பணி ஆணை கொடுத்த மகா பிரபுவிடம், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு சுந்தரி கேட்டார். ஆனால், பணத்தை தர மறுத்த மகா பிரபு, மிரட்டல் விடுத்தார். இது குறித்து சுந்தரி அளித்த புகாரின் பேரில் மகா பிரபு மீது சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு ஆய்வாளர் தமிழ்ச் செல்வி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

x