சென்னை: நீலாங்கரை பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit, ITPU-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் நேற்று (பிப்ரவரி 26ம்) தேதி நீலாங்கரை, அக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய நாகூரை சேர்ந்த கோவிந்த ராஜ் மகன் பாரதி ராஜா (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட எதிரி பாரதிராஜா விசாரணைக்குப் பின்னர் நேற்று (பிப்ரவரி 26ம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.