கன்னியாகுமரி: புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலையன் (58). கூலித் தொழிலாளியான இவருக்கு, மகேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
மகேஸ்வரி பிரிந்து வாழ்ந்து வருகிறார். மகன் சிஜோவுடன் பாலையன் வசித்து வந்தார். சிஜோ வெளிநாட்டில் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஊருக்கு வந்து, வயிற்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது நலமடைந்து நேற்று வெளிநாடு செல்வதாக இருந்தார். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிஜோ தனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதனால் மன வேதனையடைந்த பாலையன் விஷம் குடித்தார். இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலையன் நேற்று உயிரிழந்தார். சிஜோ சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.