சேலம்: வீராணத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்த தனியார் ஸ்கேன் சென்டரில் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பாக அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் சிலர் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சில கிளினிக்களுக்குச் சென்று அறிந்து வருவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, ஆட்சியர் ச.தினேஷ் குமார் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர்கள் ராஜேஷ், குமார், விமல் மற்றும் குழுவினர் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் வினோத்குமாருடன் இணைந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், சேலத்தில் உள்ள ஸ்கேன் சென்டரில் கருவில் உள்ள பாலினத்தை தெரிவிப்பதாக தெரிந்தது.
இதையடுத்து, அக்குழுவினர் சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் விசாரணை நடத்தியபோது, அங்குள்ள பசுபதி ஸ்கேன் மையத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய ரூ.15 ஆயிரம் பெற்றுக் கொண்டு தெரிவித்து வந்தது தெரிந்தது. மேலும், விசாரணையில், இம்மையத்தை, அச்சங்குட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் முத்தமிழ், தெடவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி ஆகியோர் நடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, வாழப்பாடி முதன்மை மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான அலுவலர்கள் ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக மருத்துவர், செவிலியர் மற்றும் 5 இடைத்தரகர்கள் மீது வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.