விருதுநகர்: சிவகாசி அருகே குடும்பத் தகராறில் மாமியாரை கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் காமராஜர் நகரை சேர்ந்த சுதந்திரமணி மனைவி வீரமணி (47). இவர்களுக்கு மாரீஸ்வரி (20) என்ற மகளும், சிவராஜ் (18) என்ற மகனும் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் வீரமணி பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். மாரீஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி தனியார் மில்லில் பணிபுரிந்தபோது, உடன் வேலை பார்த்த பெண்ணின் உறவினரான ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரைச் சேர்ந்த காளிதாஸ் (27) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
இருவரும் காதலித்து 2023-ம் ஆண்டு திருமணம் செய்து மதுரை காளவாசல் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் மாரீஸ்வரி சிவகாசியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சிவகாசி வந்த காளிதாஸ், வீட்டில் இருந்த வீரமணி உடன் தகராறில் ஈடுபட்டு, அவரை குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய வீரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.