திருச்சியில் பரபரப்பு: ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞர் கைது; 2 கிலோ பறிமுதல்


திருச்சி: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) இன்ஸ்பெக்டர் கே.பி.செபாஸ்டியன், திருச்சி குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ரமேஷ் ஆகியோர் தலைமையில் ஆர்பிஎப் போலீஸார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் சோதனையிட்டனர். அப்போது, ஒடிஷா மாநிலம் பத்ரக், மஷ்ரபூர்பட்னா, தாதிபமன்பூரைச் சேர்ந்த எம்.அக்ஷயா மாஜி(35) என்ற இளைஞர், பையில் வைத்து 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த ஆர்பிஎப் போலீஸார், அவரை பிடித்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கே.விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அக்ஷயா மாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x