அரியலூர்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வழக்கறிஞர் கொலை வழக்கில், அவரது உறவினர்கள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(40). ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவருக்கும், அவரது உறவினர் சுப்பிரமணியனுக்கும் இடையே தேர்தல் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. இதனிடையே கடந்த 21.2.2022 அன்று குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன்(65), அவரது மனைவி நீலம்மாள்(55), மகன்கள் செந்தில்குமார்(39), மணிகண்டன்(32), செல்வம்(35) ஆகிய 5 பேரும் சேர்ந்து அறிவழகனை கழுத்தை அறுத்துக் கொன்றனர்.
இதுகுறித்து உடையார்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து வந்த மாவட்ட முதன்மை நீதிபதி மலர்வாலாண்டினா, குற்றவாளிகள் சுப்பிரமணியன், அவரது மனைவி நீலம்மாள், மகன்கள் செந்தில்குமார், மணிகண்டன், செல்வம் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து குற்றவாளிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜராகினார்.