காரைக்குடி: காரைக்குடி அருகே லாரியில் வைக்கோலுக்குள் வைத்து 6,500 கிலோ ரேஷன்அரிசி கடத்திய ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடத்தல் ரேஷன்அரிசி காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலைகளுக்கு கொண்டு வருவதாக புகார் எழுந்தது. இதனை உணவு வழங்கல்துறை அதிகாரிகள், உள்ளூர் போலீஸார், உணவு வழங்கல் பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கண்டுகொள்ளாமல் இருந்தன.
இதையடுத்து நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் பள்ளத்தூர் பகுதியில் கொத்தமங்கலம் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வைக்கோல் ஏற்றி வந்த லாரியை சோதனையிட்டனர்.
அப்போது வைக்கோலுக்குள் 130 மூட்டைகளில் 6,500 கிலோ ரேஷன்அரிசி இருந்தன. இதையடுத்து லாரியுடன் அவற்றை பறிமுதல் செய்த தனிப்படையினர், கோட்டையூரைச் சேர்ந்த ஓட்டுநர் பழனிவேலுவை (43) கைது செய்து பள்ளத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து சிவகங்கை உணவுப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.