திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: ரூ.5 கோடி மதிப்புள்ள ”ஹைட்ரோ” கஞ்சா பறிமுதல்


திருச்சி: விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ‘ஹைட்ரோ’ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் விலை உயர்ந்த கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு (டி.ஆர்.ஐ) தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் முகாமிட்டு பயணிகள் மற்றும் அவரது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது, கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சமீர் என்ற பயணி கொண்டு வந்திருந்த லக்கேஜ்ஜில், 5 கிலோ ‘ஹைட்ரோ’ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடியாகும். இதையடுத்து, ஹைட்ரோ கஞ்சாவை பறிமுதல் செய்த டிஆர்ஐ அதிகாரிகள், அதைக் கடத்தி வந்த சமீரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஹைட்ரோ கஞ்சாவை கடத்தும் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் ரக கஞ்சா: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் விளைவிக்கப்படுவதாக கூறப்படும் இந்த கஞ்சா, மொட்டுக்களாக இருக்கும் போது குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன. முற்றிலும் இயற்கைக்கு மாறாக வளர்க்கப்படும் இந்த கஞ்சா, அதீத போதையை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக, பாங்காக்கில் இருந்து பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களுக்கு கடத்தப்பட்டு வந்த ஹைட்ரோ கஞ்சா தற்போது திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. சாதாரண ரக கஞ்சா கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்கப்படும் நிலையில், இந்த உயர் ரக கஞ்சா ஒரு கிலோ ரூ.1 கோடி மதிப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

x