குடும்ப நண்பரை மாந்திரீகம் மூலம் கொல்ல முயற்சி: பெரம்பலூரில் கல்லூரி பேராசிரியர் கைது


பெரம்பலூர் நான்கு சாலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் கு.முரசொலி மாறன் (22). இவரும், பெரம்பலூர் அபிராமபுரத்தைச் சேர்ந்த க.ரமேஷ் கிருஷ்ணன் (42) என்பவரும் குடும்ப நண்பர்கள். ஓராண்டுக்கு முன்பு முரசொலி மாறனின் அப்பா குண சேகரனை, ரமேஷ் கிருஷ்ணன் வெளியே அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்ததால் குணசேகரன் உயிரிழந்தாராம்.

இதனால், முரசொலி மாறன், ரமேஷ் கிருஷ்ணனை பலர் முன்னிலையில் கடுமையாக திட்டியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், முரசொலி மாறனை மாந்திரீகம் மூலம் உயிரிழக்கச் செய்ய ரமேஷ் கிருஷ்ணன் முயற்சித்துள்ளார். இதற்காக, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரகு (45) என்கிற மாந்தீரிகம் செய்பவருக்கும் அவரது மனைவிக்கும் 2 தவனையாக ரூ.21 லட்சத்தை அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து முரசொலி மாறன் புகைப் படத்தை வைத்து ரகு, ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் மாந்திரீகம் செய்யும் வீடியோ காட்சிகள் மந்திரவாதி நடத்தி வந்த யு டியுப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதைப் பார்த்த முரசொலி மாறன் இது குறித்து கடந்த வாரம் பெரம்பலூர் போலீஸில் புகார் அளித்தார். பெரம்பலூர் போலீஸார், ரமேஷ் கிருஷ்ணன், ரகு ஆகியோரை கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x