சேலத்தில் பணத்தை இரட்டிப்ப்பாக்கி தருவதாக மோசடி: நிதி நிறுவன உரிமையாளர்கள் உட்பட 14 பேர் கைது


சேலம்: பொதுமக்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட ஏஜென்ட்டுகள் உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் சொர்ணபுரி அய்யர் தெருவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் (35) என்பவர் கிரீயேட் பியூச்சர் இந்தியா என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கினார். பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக விளம்பரம் செய்து, முகவர்களை நியமித்தார். இதனை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது, அந்த நிறுவனத்தை மூடுவதாக கிடைத்த தகவலின் பேரில் நிதி நிறுவனத்தை நேற்று முன்தினம் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீஸார் நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் நடத்திய விசாரணை யில், நிதி நிறுவன உரிமையாளர்களான ராஜேஷ், ஹரி பாஸ்கர், மற்றொரு ராஜேஷ் அவரது மனைவி சத்திய பாமா ஆகியோர் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அந்த நிறுவனத்தில் இருந்து ரூ.2.85 கோடி ரொக்கம், 300 கிராம் தங்கம், 200 கிராம் வைரம், இரண்டு கிலோ வெள்ளியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர்.

இதனிடையே, விசாரணையின்போது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த மோசடி நிறுவனத்தைச் சேர்ந்த 10 முகவர்களையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் கைதான 14 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

x