கன்னியாகுமரி ”மரண பாறை” மீது நின்று செல்ஃபி எடுத்தபோது விபரீதம்: சேலம் இளைஞர் உயிரிழப்பு


கன்னியாகுமரி: குமரி கடலில் உள்ள ‘மரண பாறை’ மீது நின்று செல்பி எடுத்த சேலம் மாவட்ட இளைஞர் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மாரமங்கலத்தைச் சேர்ந்த 27 பேர் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் சிலர் காந்தி மண்டபம் பின்புறம் உள்ள தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் ‘மரணப் பாறை’ என்று கூறப்படும் பாறைக்குச் சென்று செல்பி எடுத்துள்ளனர். அப்போது, விஜய் (27) என்ற இளைஞர் கால் தவறி கடலில் விழுந்துள்ளார். கடல் அலையில் சிக்கி சிறிது நேரத்தில் அவர் மாயமானார்.

இது குறித்து, தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, கடலில் மாயமான இளைஞரை படகுகள் மூலம் தேடினர். பின்னர் இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை தேடுதல் பணி மீண்டும் தொடங்கியது. சற்று நேரத்தில் கடலில் மிதந்த விஜய் உடலை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக் காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

x