வேலூர்: வருமான வரித்துறை அதிகாரி, அவரது மனைவியைத் தாக்கிய பலூன் வியாபாரியைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் ஸ்ரீ பூரன் சந்த் மீனா (40). இவர், தனது மனைவி சுரண்சந்த் மீனா(34) உடன் வேலூர் கோட்டை பூங்காவுக்கு நேற்று சென்றார்.
கோட்டை பூங்காவில் வேலூர் வசந்தபுரம் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் பலூன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுரண் சந்த் மீனா, பலூன் வியாபாரியான சுபாஷ் சந்திரபோஸிடம் பலூன் வாங்கினார். அப்போது, பலூன் விலை தொடர்பாக சுபாஷ் சந்திர போஸூக்கும், வருமான வரித்துறை அதிகாரியின் மனைவி சுரண் சந்த் மீனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ், சுரண் சந்த் மீனா கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீ பூரன் சந்த் மீனா காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பதாகக் கூறினார். அப்போது அந்த வியாபாரி பலூனுக்கு காற்று அடிக்கும் பம்பை எடுத்து வருமான வரித்துறை அதிகாரி மீது வீசியுள்ளார்.
இது குறித்து ஸ்ரீபூரன்சந்த் மீனா வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சுபாஷ் சந்திர போஸைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.