காட்பாடி அருகே தனியார் கல்லூரி பேருந்து தீயில் எரிந்து சேதம்!


படம்: வி.எம்.மணிநாதன்

காட்பாடி அடுத்த சேர்க்காடு கூட்டுச்சாலை பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரியின் பேருந்து தீப்பற்றி எரிந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மகளிர் கல்லூரியின் பேருந்துகள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு மாணவிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் இருந்து ஒரு பேருந்து கல்லூரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து சேர்க்காடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த பேருந்தின் இன்ஜின் பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் புகை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி பேருந்து முழுவதும் பரவியது. பேருந்து திடீரென எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் காட்பாடி தீயணைப்பு அலுவலர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். மேலும், இந்த தீ விபத்து குறித்து திருவலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

x