உதகையில் பட்டாலியன் காவலர் ஒருவரிடம் சைபர் க்ரைம் ஆசாமி ரூ.6 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 23 வயது இளைஞர், பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் சோதனைச்சாவடி மற்றும் அணை பாதுகாப்பு பணி நிமித்தமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்தார். சிறிய மாவட்டம் என்பதால், சில நேரம் வேலை குறைவாக இருந்துள்ளது. எனவே, வீட்டில் வறுமை நிலையை போக்க வழி உள்ளதா என சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்களை பார்வையிட்டு வந்துள்லார்.
அப்போது, டெலி கிராம் ஐடி மூலமாக ஒரு லிங்க் வந்துள்ளது. அதில் கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் பணம் தரப்படும் என ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது. இதை நம்பிய சிறிது, சிறிதாக ரூ.6 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். இதற்கிடையே, இவர் முதலீடு செய்த பணத்தை தேவைக்காக எடுக்க முயற்சி செய்தபோது, பணத்தை மீண்டும் எடுக்க முடியவில்லை. இதுதொடர்பாக யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்து அளித்த புகாரின்பேரில், உதகை சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.