சென்னை: மனஉளைச்சல் மற்றும் மிரட்டல் காரணமாகவே விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதில் புகாரை வாபஸ் பெற்றாலும் கூட சமரசம் செய்து கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளி்த்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்.17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இது தொடர்பாக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள விரிவான உத்தரவில் கூறியிருப்பதாவது, ‘சீமான் இயக்கிய படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார். அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக தனது குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவி கேட்டு சீமானை விஜயலட்சுமி அணுகியுள்ளார். அப்போது விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்துள்ள சீமான். அவருடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டு திருமணத்துக்கு மறுத்து மிரட்டலும் விடுத்துள்ளார்.
அதன்பிறகே சீமானுக்கு எதிராக அவர் போலீஸில் பாலியல் புகார் அளித்துள்ளார். பதிலுக்கு சீமான் தரப்பில் இருதரப்பு சம்மதத்துடன் நடைபெறும் உறவு பாலியல் குற்றமாகாது என்றும், 2011-ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி 2012-ம் ஆண்டே வாபஸ் பெற்று விட்டதாகவும் வாதிடப்பட்டது. ஆனால், அனைவரது முன்னிலையிலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சீமான் அளித்த உத்தரவாதத்தை நம்பி அந்த புகாரை வாபஸ் பெற்றதாக விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதேபோல், சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுவதாக வழக்கறிஞரிடம் விஜயலட்சுமி அளித்த கடிதமும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கு சென்றடையவில்லை. அதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்த வழக்கில் 15 சாட்சிகளிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்குமிடையே காதல் இல்லை. உதவி கேட்டு சென்றபோது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி விஜயலட்சுமியிடம் சீமான் உறவு கொண்டுள்ளார். சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றியதால் விஜயலட்சுமி சுமார் 7 முறை கருக்கலைப்பும் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி விஜயலட்சுமியிடமிருந்து பெரும் தொகையையும் சீமான் பெற்றுள்ளார். மனஉளைச்சல் மற்றும் மிரட்டல் காரணமாகவே விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதில் புகாரை வாபஸ் பெற்றாலும் கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. கடந்த 2023 வரை இருவருக்குமிடையே ஏதோ ஒருவகையில் தொடர்பு இருந்து வந்துள்ளது. எனவே சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது’ என தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்