திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், கனடா நாட்டை சேர்ந்தவரிடம் துப்பாக்கித் தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, இன்று (பிப்.21) பிற்பகல் 3.10 மணிக்கு செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தயார் நிலையில் இருந்தது. விமானத்தில் செல்லக்கூடிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பயணியின் உடமையில் துப்பாக்கித் தோட்டா ஒன்று இருந்துள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்தப் பயணியை பிடித்து விசாரித்தனர். அவர் கனடா நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் டொனால்ட் வில்சன். அங்கு நர்ஸாக பணிபுரியும் அவர் தனது மனைவி பிரிட்டானி சீலியுடன் திருச்சி விமான நிலையத்துக்கு வந்திருப்பது தெரியவந்தது.
மேலும் அவர் ரஷ்யாவில் இருந்து ஸ்கூட் விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து கடந்த 17-ம் தேதி சென்னை வந்திருக்கிறார். சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் நேற்று திருச்சி வந்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக ரஷ்யா செல்லவிருந்தார்.
இவர் தனது உடைமைகளில் 12 எம்எம் துப்பாக்கித் தோட்டா வைத்திருந்தார். இது, விலங்குகளை வேட்டையாடக்கூடிய துப்பாக்கியுடைய தோட்டா என்பது தெரியவந்தது. அவரிடம் அந்த துப்பாக்கிக்குரிய உரிமம் இருந்தது. ஆனாலும், விமானத்தில் அபாயகரமான வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்வது தடைச் செய்யப்பட்டுள்ளது.
இது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், அவரை திருச்சி விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் கனடா நாட்டு பயணியிடம் துப்பாக்கித் தோட்டா சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.