கரூர்: பூட்டிய வீட்டில் ஏசி வெடித்து தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசமாயின. கரூர் காதப்பாறை அன்பு நகரைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் இன்று (பிப்.21) காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டினுள் இருந்து புகை வெளி வந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அருகேயுள்ள வெண்ணெய்மலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் பணிக்காக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வாகனம் நின்ற நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஏசி அவுட்டோர் யூனிட், ஜன்னல்கள் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். மின் கசிவு ஏற்பட்டு ஏசி மூலம் தீப்பிடித்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த ஏசி, கட்டில், டிவி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின.