புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள வம்புபட்டு ஏரிக்கரையோரம் காலாவதியான பிஸ்கெட், சாக்லெட் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து ஆணையர் நேரடியாக ஆய்வு செய்தார்.
மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வம்புபட்டில் ஏரி உள்ளது. வம்புபட்டு ஏரிக்கரையோரம் பிஸ்கட் பாக்கெட்டுகள், மேகி பொட்டலங்கள், சாக்லேட்கள் இன்று கொட்டப்பட்டிருந்தன. அவை காலாவதியானவை என தெரியவந்தது. இதனை அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் சாப்பிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
இதுகுறித்து மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார் வந்தது. இதனையடுத்து ஆணையர் எழில்ராஜன் நேரடியாக அங்கு சென்று பார்வையிட்டார். கிராம மக்களை அழைத்து விசாரணை செய்தார். அப்போது எற்கனவே காலாவதியான உணவு பொருட்கள் கொட்டப்பட்டு அவற்றை சாப்பிட்ட 2 ஆடுகள் இறந்ததாக கிராம மக்கள் ஆணையரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, காலாவதி உணவு பொருட்களை கொட்டியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரிடம் ஆணையர் எழில்ராஜன் புகார் அளித்துள்ளார்.