கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலு (53), விநாயகம் (55), ராமலிங்கம் (60), வேல்முருகன் (33). வேலம்பூண்டியைச் சேர்ந்தவர் வீராசாமி (34) இவர்கள் 5 பேரும் கீழக்கடம்பூரில் உள்ள ஒரு மல்லிகை தோட்டத்தில் தொழிலாளிகளாக வேலைக்குச் சென்றனர்.
அங்கு 16 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பணியாற்றி வந்தார். மேற்கண்ட 5 பேரும், அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவ்வப்போது தனித்தனியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இந்நிலையில் அந்தச் சிறுமிக்கு கடந்த 2019 -ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் போனது. சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, அந்தச் சிறுமி கருவுற்று இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் பாலு, விநாயகம், ராமலிங்கம், வேல்முருகன், வீராசாமி ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கிடையில் அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. டிஎன்ஏ பரிசோதனையில் அந்தக் குழந்தை வீராசாமியுடையது என்பது உறுதியானது. இந்த வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பளித்தார்.
இதில் 5 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வீராசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பாலு, விநாயகம், ராமலிங்கம், வேல்முருகன் ஆகியோருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பால ரேவதி ஆஜரானார்.