வேலூர்: முகநூல் விளம்பரத்தின் மூலம் பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண் உட்பட 2 பேரிடம் ரூ.40.41 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த ரேகா என்பவரின் முகநூல் பக்கத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என விளம்பரம் வந்துள்ளது. அதை உண்மை என நம்பி அந்த இணைப்பின் வழியாக தொடர்புகொண்டபோது வாட்ஸ்-அப் குழுவில் ரேகா இணைக்கப் பட்டார். இதன் தொடர்ச்சியாக 'ஆன்லைன்' முறையில் பங்கு முதலீடு செய்வது வருவாய் ஈட்டுவது உள்ளிட்டவற்றை அவர்கள் விளக்கியுள்ளனர்.
பின்னர், முதலீட்டு தொகையாக பல்வேறு காலக் கட்டங்களில் ரேகா, ரூ.26 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். அதற்கான லாபம் ரேகாவின் கணக்கில் வந்ததுடன் முதலீட்டு தொகையை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து முயற்சித்தபோது பணத்தை எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வேலூர் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அதேபோல், முகநூல் பக்கத்தின் மூலம் பங்குச்சந்தை முதலீட்டில் பணத்தை எடுக்க முடியாமல் வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரும் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அவர், பல்வேறு கட்டங்களில் ரூ.13 லட்சத்து 86 ஆயிரம் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தது தெரியவந்தது. இந்த 2 புகார்கள் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி குமார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றார்.