சென்னை: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.5 லட்சம் திருடுப்போன சம்பவத்தில், பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, கொண்டித்தோப்பு, கண்ணையா தெருவில் பாஸ்கர், (64) என்பவர் வசிக்கிறார். இவர் பிராட்வே, அண்ணாப்பிள்ளை தெருவில் மிளகாய் மண்டி நடத்தி வருகிறார். இவர் கடந்த 27.01.2025 அன்று இரவு வியாபாரம் முடித்து கடையை பூட்டிவிட்டு ரூ.5 லட்சம் பணத்தை இருசக்கர வாகனத்தின் டிக்கியில் வைத்து எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தை அவரது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு மறதியாக பணத்தை எடுக்காமல் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பின்னர் இரவு 11.30 மணியளவில் வண்டியில் வைத்த பணத்தை எடுக்க இருசக்கர வாகனத்தை வந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தின் டிக்கியில் வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து பாஸ்கர் ஏழுகிணறு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்டமாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தில் பணத்திருட்டில் ஈடுபட்டது கொடுங்கையூர், தென்றல் நகரைச் சேர்ந்த அஜித்குமார் (எ) ஸ்பீடு அஜித், (21) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அஜித்குமார் (எ) ஸ்பீடு அஜித் மீது ஏற்கெனவே 11 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் அஜித்குமார் நேற்று (20.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.