திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச் சரகத்துக்கு உட்பட்ட ஜெரோனியம் வனப்பகுதியில் பிப்.15ம் தேதி காட்டுத் தீ பரவியதில் வனப்பகுதியில் உள்ள செடி, மரங்கள் மற்றும் தனியார் தோட்டத்தில் உள்ள மரங்களும் தீக்கிரையாகின. இது தொடர்பாக வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் விசாரித்தனர்.
இதில், ஜெரோனியம் பகுதியை சேர்ந்த சந்திரன் (46), தோட்டத்தை சுத்தப்படுத்தி, காய்ந்த மரக்கிளைகள், செடிகளை குவித்து வைத்து தீ வைத்ததுள்ளார். அப்போது, தீ வனப்பகுதிக்கும் பரவியது தெரியவந்தது. இதையடுத்து, சந்திரனை நேற்று வனத்துறையினர் கைது செய்தனர்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், பட்டா நிலங்களில் தீ வைக்கும் முன்பு வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி பட்டா நிலங்களில் தீ வைக்கும்போது வனப்பகுதிக்கும் தீ பரவினால் வனச் சட்டத்தின் படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.