இளையான்குடி: இளையான்குடி அருகே மணல் கடத்தல் குறித்து புகார் கொடுத்த சமூக ஆர்வலரை காரில் கடத்தி தாக்கிய 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (35). இவர் சாலைக்கிராமம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் மணல், மண் கடத்தல் குறித்து அடிக்கடி அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் புகார் கொடுத்து வந்தார். இதனால் சட்டவிரோதமாக மண், மணல் குவாரி நடத்தியோருக்கு இடையூறு ஏற்பட்டது.
இதுதவிர ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதும், அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்களை பெற்றும் வந்தார். அவருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் சாலைக்கிராமம் அருகேயுள்ள சாத்தனூரில் பள்ளி விழா முடித்துவிட்டு, ஆசிரியர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ராதாகிருஷ்ணன் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை அருகே வந்தபோது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆசிரியரை விட்டுவிட்டு, ராதாகிருஷ்ணனை கடத்திச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த சாலைக்கிராமம் போலீஸார் காரை தேடி வந்தனர். இதனிடையே அந்த கும்பல் ராதாகிருஷ்ணன் காரில் வைத்து கடுமையாக தாக்கிவிட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றது.
தொடர்ந்து படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்வின் நேரில் விசாரித்தார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் புகாரின்பேரில் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன், பாலுச்சாமி, கார்த்தி, தாளையடிகோட்டையைச் சேர்ந்த கவி (எ) புகழ், மணி ஆகிய 5 பேர் சாலைக்கிராமம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறியதாவது: “சாலைக்கிராமம் பகுதியில் 3 அடி கீழே மணல் கிடைக்கிறது. இதனால் 3 அடிக்கு கீழே மண் அள்ள கடந்த 2020-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளேன். ஆனால் அதையும் மீறி இரவு, பகலாக மணல் அள்ளி கடத்தினர். இதுகுறித்து வருவாய்த்துறையினர், போலீஸாருக்கு புகார் அனுப்பினேன்.
அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எனக்கு அச்சுறுத்தல் வந்தது. இதையடுத்து எனக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் உயரதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை இல்லாதநிலையில் என்னை கடத்தி தாக்கியுள்ளனர். ஏற்கெனவே 2023-ம் ஆண்டு ஒரு கும்பல் கடத்தி தாக்கியது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மீண்டும் என்னை தாக்கியதால் எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கடத்தப்பட்ட தகவல் தெரிந்ததும் நாங்கள் பின்தொடர்ந்தோம். இதை அறிந்து தான் கடத்தல் கும்பல் அவரை இறக்கிவிட்டுச் சென்றது’ என்றனர்.