காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மெத்தை, தலையணை தயாரிக்கும் தொழிற்கூடத்தில் இன்று (பிப்.20) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் ஜானி பாஷா என்ற படுக்கை, மெத்தை மற்றும் பாய்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடை உள்ளது. பிரபலமான இந்த கடையின் மற்றொரு உற்பத்தி குடோன் காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் உள்ள எம்.எம் அவென்யூ பகுதியில் பள்ளிக்கூடத்தான் தெருவில் இயங்கி வருகிறது.
இங்கு இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் செயற்கை பஞ்சு மூலம் தலையணை மற்றும் மெத்தைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் மெத்தை தயாரிக்கும் குடோனில் மின் இணைப்பை ஆன் செய்துள்ளனர். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மெத்தை தயாரிக்கும் பொருட்கள், மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவை திடீரென தீப்பற்றியது. ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மெத்தைகளும் இந்த தீயில் எரிந்தன. மொத்தம் 3 அடுக்கு மாடி வீடாக இருப்பதால் தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.
உடனடியாக ஊழியர்கள் வெளியேறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற்பட்டோர், 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து போராடி தீயை அணைத்தனர். இதனால் ஏற்பட்ட கரும்புகை சுமார் 1 கி.மீ சுற்றளவுக்கு பரவியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள விஷ்ணுகாஞ்சி போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மெத்தை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தததால் அக்கம் பக்கத்தினர் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.