செய்யாறில் சுவாரஸ்யம்... கவரிங் நகைகளை தங்கம் என நினைத்து திருடிய இளைஞர் கைது


செய்யாறு: பட்டப்பகலில் நகைக்கடையில் கவரிங் நகைகளைத் தங்க நகைகள் என நினைத்துத் திருடிக் கொண்டு ஓடிய இளைஞரைப் பொது மக்கள் விரட்டிப்பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்தி சாலையில் செயல்பட்டு வரும் ஒரு நகைக்கடையில் இளைஞர் ஒருவர் நேற்று நகைகள் வாங்க வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கேட்ட டிசைன்களில் நகைகளை ஊழியர்கள் எடுத்து வைத்தனர். திடீரென அந்த நகைகளை அள்ளிக்கொண்டு கடையிலிருந்து அந்த இளைஞர் ஓட்டம் எடுத்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் கூச்சலிட்டதுடன் விரட்டினர். பேருந்து நிலையம் அருகே அவரை பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் கே.கே.நகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) எனத் தெரியவந்தது. மேலும் அவர் திருடிச் சென்றது கவரிங் நகைகள் என்றும், அவர் மீது கடை ஊழியர்களுக்குச் சுந்தேகம் இருந்ததால் கவரிங் நகைகளைக் காண்பித்துள்ளனர். அதை உண்மையான தங்க நகைகள் என்று நம்பி திருடிச் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

x