புதுச்சேரி: பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி 11 தொழிலதிபர்களிடம் ரூ.10 கோடி மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் சரவணனை (41), கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் எண்ணில் மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ஆன்லைன் பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய சரவணன் ரூ.1 கோடியே 69 லட்சத்தை மர்மநபர் மூலம் முதலீடு செய்துள்ளார். அதன் பின்னர் அந்த முதலீடு நஷ்டமாகிவிட்டதாக கூறிய மர்ம நபர், பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளார். தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சரவணன் இது குறித்து புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சரவணை ஏமாற்றியது அய்யங்குட்டிப் பாளையத்தைச் சேர்ந்த சவுந்தர ராஜன் (35) என்பது தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீஸார் தேடி வந்தனர். தற்போது சவுந்தர ராஜன் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் திருப்பூர் சென்று சவுந்தரராஜனை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சரவணன் உள்ளிட்ட 11 தொழிலதிபர்களிடம் ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித்தருவதாகக் கூறி ரூ.10 கோடிக்கு மேல் ஏமாற்றியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவரின் வங்கிக்கணக்குக்கு மாற்றியதும் தெரியவந்தது. மேலும் சவுந்தர ராஜன் மீது பெரிய கடை, மேட்டுப்பாளையம் காவல் நிலையங்களில் ஏற்கெனவே மோசடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.