நெல்லை மாணவர் மர்ம மரணம்: உடலை வாங்க பெற்றோர் மறுப்பு


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா பர்கிட் மாநகர் அருகே உள்ள அண்ணாநகரைச் சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ்(23). இவர் போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 13-ம் தேதி விடுதி கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அங்கு ரத்தம் உறைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெற்றோரும், உறவினர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவரின் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடற்கூராய்வுக்கு பெற்றோர் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இருப்பினும் அறிக்கை வரும் வரை உடலை வாங்க மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் மாணவரின் உடல் பிணவறையிலே வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூராய்வு அறிக்கை வந்தால்தான் மாணவரின் மரணம் குறித்த விவரங்கள் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

x