திருப்பூர் வங்கியில் மோசடியாக ரூ.1 கோடி கடன் பெற்ற வழக்கு: மூவருக்கு தலா 3 ஆண்டு சிறை


கோவை மத்திய சிறை

திருப்பூர்: ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (55). இவருக்கு நல்லூரில் 2.32 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை குமரன் சாலையில் உள்ள வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற முயன்றார்.

இந்த நிலத்துக்கான அசல் ஆவணங்களுடன் வங்கிக்கு சென்றார். அந்த ஆவணத்தை வங்கி ஊழியர்கள் சரி பார்த்த போது, சுப்பிரமணியத்துக்கு தெரியாமல், ராமகிருஷ்ணன் (48), சிவக்குமார் (50), செல்வராஜ் (55) ஆகியோர் கூட்டு சேர்ந்து, அந்த நிலத்தை ரூ.4.90 லட்சத்துக்கு சுப்பிரமணி விற்பனை செய்தது போன்று போலியான ஆவணங்களை தயார் செய்து வங்கியில் ரூ.1 கோடிக்கு கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் நடந்து வந்தநிலையில், நீதிபதி முருகேசன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

x