சாயல்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை


தற்கொலை செய்து கொண்ட தலைமையாசிரியர் சேட் அயூப்கான்

சாயல்குடி அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், தலைமை ஆசிரியர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் சேட் அயூப்கான் (56). மா ரியூரைச் சேர்ந்த இவர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, குழந்தை நல அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்று, மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். நேற்றும் விசாரணை நடக்க இருந்தது.

இந்நிலையில், தலைமை ஆசிரியர் சேட் அயூப்கான் தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பரமக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேதுராமன் கூறும்போது, "

தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்ததால் நேற்று முன்தினம் குழந்தைகள் நல அலுவலர், கடலாடி வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை இன்னும் சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தலைமை ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

x