கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,145 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீநகர் என்ற பகுதியில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான ஒரு குடோன் உள்ளது. இங்கு பல லிட்டர் கணக்கில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய நுண்ணறிவு பிரிவின் கோவை மாவட்ட ஆய்வாளர் காமராஜ் குழுவினருக்கு இன்று (பிப்.19) ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், இன்ஸ்பெக்டர் காமராஜ், எஸ்.ஐ. உதயசந்திரன் குழுவினர் தகவல் கிடைத்த இடத்துக்குச் சென்று இன்று சோதனை நடத்தினர். அதில் மேற்கண்ட குடோனில், 35 கேன்களில் 5,145 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு, கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கருமத்தம்பட்டி உட்கோட்ட டிஎஸ்பி தங்கராமன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருட்கள் வைத்து எடுத்துச் செல்வதற்கு குடோன் தேவைப்படுவதாக கூறி, மேற்கண்டவர்கள் இந்த குடோனை கடந்த 9-ம் தேதி வாடகைக்கு எடுத்ததும், இங்கிருந்து எரிசாராயத்தை கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவுக்கு கடத்திச் சென்று வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணைக்கு பிறகு இதுதொடர்பாக கேரள மாநிலம் கொல்லங்கோட்டைச் சேர்ந்த ரஜித்குமார் (38), இடுக்கியைச் சேர்ந்த ஜான் விக்டர் (45), ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பிரபாகர் (47) ஆகிய மூவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராய கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.