புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வைரம் மற்றும் தங்க நகைகள் என மொத்தம் 55 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் விரிவாக்கம் கோல்டன் அவென்யூ பகுதியில் வசித்து வருவபவர் ஸ்ரீதரன்(67). விழுப்புரத்தில் டயர் ரீ டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்த இவர் வயது முதிர்வு காரணமாக தற்போது அந்த தொழிலைவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு சூர்யபாலா என்ற மனைவியும், ஷாலினி என்ற மகளும் உள்ளனர். ஷாலினி திருமணமாகி சென்னையில் கணவருடன் வசித்து வருகின்றார். இதனிடையே ஸ்ரீதரன் தனது மனைவி சூர்யபாலாவுடன் மகளை பார்க்கவும், மருத்துவ பரிசோதனைக்காகவும் அடிக்கடி சென்னை சென்று வந்துள்ளார்.
கடந்த 16-ம் தேதி வழக்கம்போல் மனைவியுடன், சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு ஸ்ரீதரன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னைக்கு சென்ற ஸ்ரீதரனை தொடர்பு கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மனைவி மற்றும் மகள், மருமகனுடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பக்கவாட்டு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீடிரோவில் லாக்கரை உடைத்து அதிலிருந்த வைர கம்மல், வளையல், மோதிரம், கருப்புக்கல், வெள்ளைக்கல் பதித்த தங்க வளையல்கள் மற்றும் தங்க நகைகள் என மொத்தமாக 55 சவரன் நகைகள் மற்றும் சில்லரை பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஸ்ரீதரன் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீதரன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பக்கவாட்டு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பீடிரோவில் இருந்த லாக்கரை உடைத்து நகைகளை திருடிச் சென்றதும். பக்கத்தில் இருந்த மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் திரும்பிச் சென்றதால் அதிலிருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் தப்பித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.