காளையார்கோவில் அருகே சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: விவசாயி கைது


சிவகங்கை: காளையார்கோவில் அருகே சட்டவிரோத மின்வேலியில் சிக்கி வேட்டைக்குச் சென்ற இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக விவசாயி ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒட்டணத்தைச் சேர்ந்த செல்வம் மகன் ரஞ்சித் (24). இவர் நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்றார். அப்போது விவசாயி ஜெபமாலைராஜ் (60) என்பவரது விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியை மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று காலை ஜெபமாலை தனது நிலத்துக்குச் சென்றபோது, ரஞ்சித் இறந்து கிடந்ததை பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து ஜெபமாலைராஜை கைது செய்தனர். விசாரணையில், காட்டுப்பன்றிகளிடம் இருந்து நிலக்கடலை பயிரைப் பாதுகாக்க மின்வேலி அமைத்தது தெரியவந்தது.

தொடரும் உயிரிழப்புகள்

கடந்த 2022-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியில் வேட்டைக்குச் சென்ற விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே முகவூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் என 3 பேர் கட்டுப்பன்றிகளை விரட்ட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில் ஆகிய வட்டாரங்களில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் திரிகின்றன. இதனால் ஆண்டுதோறும் 500 ஏக்கருக்கு மேல் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், அதை வனத்துறையினர் காட்டுப்பன்றிகள் இல்லை என்று கூறி மறுத்து வருகின்றனர். இதனால், இழப்பீடு கிடைக்கவில்லை. காட்டுப்பன்றியா அல்லது சாதாரண பன்றியா என்ற சர்ச்சையால் அவற்றை அழிப்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து அது எந்த வகை பன்றிகள் என்று 2 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உத்தரவின்பேரில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆனால் இதுவரை ஆய்வு முடிவுகள் வெளிவரவில்லை. இதற்கிடையே காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த சட்டவிரோதமாக சிலர் மின்வேலி அமைக்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. விரைவில் பன்றிகள் குறித்த அதிகாரிகள் ஆய்வு முடிவை வெளியிட்டு, அவற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘ விளைநிலங்களில் சோலார் மின்வேலி அமைக்கத்தான் அனுமதி உள்ளது. மின்வேலி அமைக்க அனுமதி கிடையாது’ என்றனர்.

x