வேலூரில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


வேலூர்: பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்தும் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவராக பணியாற்றி வந்தவர் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி இரவு காட்பாடியில் உள்ள திரையரங்கில் தனது ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் ஆட்டோவில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் பயணித்த கும்பல், பெண் மருத்துவரையும் அவரது ஆண் நண்பரையும் கத்திமுனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பாலாற்றங்கரைக்கு கடத்தி சென்றதுடன் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பெண் மருத்துவரின் தங்கச்சங்கிலி, கைபேசியை பறித்துக் கொண்டதுடன், அவரது ஆண் நண்பரின் ஏடிஎம் கார்டை பறித்துச் சென்று அதிலிருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.

இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் குறித்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜேஷ் கண்ணனுக்கு பெண் மருத்துவர் புகார் அனுப்பினார். அதன்படி, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ததுடன் குற்றவாளிகளான வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் (20), பரத் (18), மணிகண்டன் (21), சந்தோஷ்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை அதிகாரியாக துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச் சந்திரன் நியமிக்கப்பட்டார். வழக்கில் கைதான சிறுவனை சென்னை கெல்லீஸில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். சிறுவன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை மட்டும் வேலூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் தனியாக நடந்து வந்தது.

இதற்கிடையில், பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் ஆகிய 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஜன.30-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 17 வயது சிறுவன் மீதான வழக்கின் தீர்ப்பை வேலூர் போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் நேற்று வழங்கினார். இதில், சிறுவன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.23 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

x