கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள இன்னாடு ஊராட்சிக்குட்பட்ட மேல்நிலவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர், தனது கூட்டாளிகளோடு கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி தயாரித்து, விற்பனை செய்து வருவதாக கரியாலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் நேற்று அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அபோது, இரு நாட்டுத் துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை அங்கு கைப்பற்றினர். அவற்றை, பறிமுதல் செய்த போலீஸார், கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கித் தயாரித்து வருவதாக குமார் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குமாரின் கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி மற்றும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டு ராபின்சன் ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.