ராமநாதபுரத்தில் பயங்கரம்: நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு சென்றவரை வழிமறித்து கொலை


ராமநாதபுரம்: கடலாடி அருகே நீதிமன்றத்தில் ஜாமின் கையெழுத்திட்டுச் சென்றவரை மர்ம நபர்கள் வழிமறித்து கொலை செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் அரியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (41). இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு மீதும் கடலாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த கருப்பசாமி, கடலாடி மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். நேற்று கருப்பசாமி, கடலாடி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு மங்கலம் வழியாக அரியநாதபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது ஆப்பனூர் தெற்குகொட்டகை விலக்கு சாலையில் வழிமறித்த மர்ம நபர்கள், கருப்பசாமியை ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமியை அப்பகுதியினர் மீட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். கடலாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடலாடி, ஆப்பனூர், புனவாசல் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

x