பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகர், துரைக்கண்ணு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பாஜக செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி என்பவரும் பாஜக செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக உள்ளார்.
ஜெயராமன் அதே பகுதியில் ‘யெங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்தார். அதில், தான் ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டியில் உறுப்பினர் என்றும், இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் டீமில் தான் ஒரு ரெப்ரி என்பது போன்றும் தனக்குத் தானே விசிட்டிங் கார்டு தயார் செய்து வைத்திருந்தார்.
அதன் மூலம் தான் சந்திக்கும் நபர்களிடமெல்லாம் தான் பாஜக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால், தனக்கு மத்திய அமைச்சர்கள் அனைவரும் மிக நெருக்கம். அதனால் நான் நினைத்தால் உங்களுக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு (என்ஐஏ), வருமான வரித்துறை, ரயில்வே, உளவுத்துறை போன்ற பல்வேறு பணிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கித் தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறி வந்தார்.
அதனை உண்மையென்று நம்பிய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ்குமார் (32). வேலை வாங்கித் தருமாறு அணுகினார். அவரிடம் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.17 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்ட ஜெயராமனும், அவரது மனைவி அஸ்வினி, அலுவலக உதவியாளர் பிரியா ஆகியோர் சேர்ந்து பணத்தை வாங்கிக் கொண்டு, வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.
இந்நிலையில், ஏமாற்றப்பட்ட லோகேஷ்குமார், கடந்த ஜனவரி மாதம், தாம்பரம் போலீஸ் ஆணையரகத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகார், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. சங்கர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி, ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.