சென்னை: முன்விரோதத்தில் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017 ஜன.27 அன்று சென்னை விருகம்பாக்கம் மதார்ஷா தெருவில் சிலருடன் பேசிக்கொண்டிருந்த பெயிண்டிங் தொழில் புரியும் ஜாகிர் உசேன் (25) என்ற இளைஞரை, முன்விரோதம் காரணமாக அவரது நண்பர்களான ஸ்ரீகாந்த் (24), ரத்தினராஜ் (22), முரளி (24), ரஞ்சித் (19) ஆகியோர் குடிபோதையில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்து விட்டார். இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு விசாரணை சென்னை மாவட்ட 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. புவனேஸ்வரி முன்பாக நடந்து வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி. சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் ஏற்கெனவே இறந்து விட்டதால், மற்ற 3 பேருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.