சோழவந்தான் அருகே பணிபுரிந்த வங்கியிலேயே 70 பவுன் அடகு நகைகளை திருடிய நிர்வாகி கைது


கைதான துணை மேலாளர் கணேஷ்

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு வங்கியில் 70 பவுன் அடகு நகைகளை திருடிய வங்கியின் துணை மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.

மன்னாடிமங்கலம் கிராமத்திலுள்ள அரசு வங்கி கிளை ஒன்றில் மேலாலராக ஸ்ரீராம், துணை மேலாளராக கணேஷ் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ராஜா உள்ளிட்ட 6 பேர் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி அவ்வங்கியின் மேலாளர் ஜெய்கிஷான் உத்தரவின்படி வங்கியில் தணிக்கை நடந்தது. 2023 செப். 9-ம் தேதி முதல் 2024 செப். 9-ம் தேதி வரையிலும் அடகு வைத்தவர்களில் 9 நபருக்கான சுமார் 561.5 கிராம் மதிப்புள்ள 70 பவுன் தங்க நகைகள் (9 பொட்டலங்கள்) வங்கி லாக்கரில் இல்லை என்பது தெரியவந்தது.

இதுபற்றி வங்கி நிர்வாகம் நடத்திய விசாரணையில் வங்கியின் துணை மேலாளர் கணேஷ் (33) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக வங்கி மேலாளர் ஜெய்கிஷான் காடுபட்டி போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்தனர். இதில், துணை மேலாளர் கணேஷ் வங்கி லாக்கரில் இருந்த 70 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த தகவலறிந்து வங்கியில் நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கியில் திரண்டனர். அவர்கள் தங்களது அடகு நகைகளை சரிபார்த்து சென்றனர்.இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஆன்லைன் சூதாட்டத்தால் வங்கியின் துணை மேலாளர் கணேஷ் பல லட்சம் பணத்தை இழந்திருக்கிறார். இதற்காக அவர் வெளியில் கடன் வாங்கி இருக்கிறார்.

கடனை அடைக்க வேறு வழியின்றி பணிபுரிந்த வங்கியிலேயே அடகு நகைகளை திருடி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வங்கியில் பணிபுரியும் வேறு ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்றனர்.

x