மதுரை: மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக ஏமாற்றி ரூ.52.66 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க, சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையை தொடங்கினர். பாதிக்கப்பட்ட நபர், ஆன்லைன் வேலை கொடுத்ததாக கூறிய நபர்களுக்கு வங்கி மூலம் பணம் அனுப்பிய விவரங்களை போலீஸார் சேகரித்தனர். இதன் மூலம் அந்த நபர்கள் பெயரில் வங்கிகளில் இருப்பு வைத்திருந்த ரூ.76,52,625-யை முடக்கினர்.
இந்த மோசடி தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கேரளா காயாம்குளம் நவ்சத் மகன் அன்வர்சா கொடுத்த தகவலின் பேரில் விசாரித்தனர். இதில் கர்நாடகா மைசூர் உதயகிரியைச் சேர்ந்த முனவர்கான் மகன் சல்மான்கான், சானுல்லா என்பவர் மகன் ஜூபர்கான், மைசூர் என்ஆர்.மொகல்லா ராஜேந்திரன் மகன் கிரியேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இவர்களை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் தமிழ்நாடு மட்டுமன்றி தெலுங்கானா பகுதியிலும் பலரிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியந்தது. தனிப்படையை எஸ்பி அரவிந்த் பாராட்டினார்.
எஸ்பி அரவிந்த கூறுகையில், ”இது போன்ற குற்றங்களில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பண மோசடி தொடர்பாக சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசியை தொடர்பு கொண்டும் மற்றும் பிற சைபர் குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமும் புகார் அளிக்கலாம்” என்றார்.